ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 
இந்தியா

ஸ்பெயினுக்கு செல்ல முடிந்த உங்களால் மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாதா? - மம்தாவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் கேள்வி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்பெயினுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் படுவேகமாக பரவி வருகிறது. பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மம்தா ஸ்பெயினுக்கு சென்று திரும்பியுள்ளார். ஸ்பெயினுக்கு செல்ல முடிந்த மம்தாவால் மாநில மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியவில்லையா? ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் டெங்கு பரவும் அபாயம் குறித்து ஏற்கெனவே மாநில அரசிடம் எச்சரிக்கை செய்திருந்தோம். ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் செலவாகும் ஒரு ஓட்டலில் உங்களால் (மம்தா பானர்ஜி) எப்படி தங்க முடிந்தது? இந்தப் பயணத்துக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள்?

ஸ்பெயின் சென்று எந்தெந்த தொழிலதிபர்களை இங்கு முதலீடு செய்ய அழைத்து வந்தீர்கள்? மாநில மக்களை ஏமாற்றாதீர்கள். தொழில்துறை கூட்டத்துக்காக நீங்கள் செலவழித்த தொகையில் 10 சதவீதம் திரும்ப வந்திருந்தால், மேற்கு வங்கத்தில் வேலையில்லாத லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்.

வந்தே பாரத் ரயில் கட்டணம் சாதாரண ரயில்களை விட அதிகம். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது எளிதான விஷயம் அல்ல. பாஜகவுக்கும் இது தெரியும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முக்கியம். ஆனால், மக்களை பாஜக அரசு, உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப முயல்கிறது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

SCROLL FOR NEXT