இந்தியா

புனே நிலச்சரிவு: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் நேரில் ஆய்வு

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும் என்று உறுதியளித்தார்.

புனே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியாகினர். மேலும் 175 பேரின் நிலைமை என்னவென்று தெரியாத நிலையில், 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் பேசும்போது, "சுமார் 45 வீடுகள் மற்றும் ஒரு கோயில் தரைமட்டமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னரே, தற்போது முழு அறிவிப்பு விடுவிப்பது இயலாது" என்றார்.

SCROLL FOR NEXT