கோப்புப்படம் 
இந்தியா

“காத்திருந்து தான் பார்க்க வேண்டும்” - லேண்டர், ரோவர் விழிப்பு குறித்து கே.சிவன் கருத்து

செய்திப்பிரிவு

நிலவில் தரையிறங்கி உள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழிப்பு சார்ந்து கொஞ்சம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை ஆக.23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.

இதற்கிடையே, நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் ரோவர், லேண்டர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (ஸ்லீப் மோடு) வைக்கப்பட்டன. தற்போது நிலவில் பகல் பொழுது தொடங்கி உள்ளதாக தகவல். அதனால் உறக்க நிலையில் உள்ள லேண்டரையும், ரோவரையும் விழித்தெழ செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். இந்த சூழலில் அது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

“நாம் கொஞ்சம் காத்திருந்து தான் இதை பார்க்க வேண்டும். நிலவில் ஓர் இரவை கலன்கள் கடந்துள்ளன. இப்போது பகல் தொடங்குகிறது. அதனை விழித்தெழ செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து அமைப்புகளும் சரியாக இயங்கினால் அது இயக்கத்துக்கு வரும். இது முடிவல்ல. அறிவியல் சார்ந்து புதிய தகவல்களை நாம் பெறுவோம். சந்திரயான்-1 நிறைய தகவல்களை சேகரித்து தந்தது. அதனால் பல புதிய தகவல்களை நாம் பெறுவோம் என நான் நம்புகிறேன். விஞ்ஞானிகள் அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். அதனால் இது கதையின் முடிவு அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT