இந்தியா

டெல்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இப்பயணத்தை தொடர்ந்து அவர் லாரி ஒட்டுநர்கள், மீனவர்கள், விவசாயிகள், உணவு விநியோக தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களை ராகுல் நேற்று சந்தித்தார். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சிவப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து பயணிகளின் உடைமைகளை அவர் சிறிது தூரம் தூக்கிச் சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் தனது பதிவில், “மக்களின் நாயகன் ராகுல் காந்தி டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் தனது போர்ட்டர் நண்பர்களை சந்தித்தார். ராகுல் காந்தியை சந்திக்க இவர்கள் விருப்பம் தெரிவிக்கும் காட்சிப் பதிவு சமீபத்தில் வைரலானது. எனவே ராகுல் அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்” என்று குறிப்பிட்டுள்ளது.

ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “டெல்லி ஆனந்த் விஹார் முனையத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளர் சகோதரர்களை இன்று சந்தித்தேன். இந்த ஆசை நீண்ட நாட்களாக என் மனதில் இருந்தது, அவர்களும் என்னை மிகவும் அன்புடன் அழைத்தார்கள். கஷ்டப்பட்டு உழைக்கும் இந்திய சகோதரர்களின் விருப்பம் என்ன விலை கொடுத்தாவது நிறைவேற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT