இந்தியா

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் டெல்லியில் குமாரசாமி ஆலோசனை

இரா.வினோத்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மஜத மூத்த தலைவர் குமாரசாமி நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, இண்டியா கூட்டணியில் இணையவில்லை என்று அறிவித்தது.

இதையடுத்து பாஜக மேலிடத் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் மஜதவுடன்கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டினர். முதல்கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு, மஜத மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ‘‘பாஜக மஜத கூட்டணி உறுதியாகிவிட்டது. 5 தொகுதிகள் மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று அறிவித்தார்.

இதனை மறுத்த குமாரசாமி, “இன்னும் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே பேசியுள்ளோம்'' என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் குமாரசாமி நேற்று டெல்லி சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மஜதவுக்கு 6 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பாஜக தரப்பில் 4 தொகுதிகள் தருவதாக கூறப்படுகிறது.

பிரதமருடன் சந்திப்பு: இதுகுறித்து குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். முழு விபரங்களை வெள்ளிக்கிழமை அறிவிக்கிறேன்'' என்றார்.

இதனிடையே மஜத தேசிய தலைவர் தேவகவுடா இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த உறுதியான அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT