புதுடெல்லி: மக்களவையில் நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியதாவது: கடந்த 2011-ம் ஆண்டு ஐ.மு. கூட்டணி அணி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தபோது, அவர்களின் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை மக்களவையின் மையப் பகுதியில் வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் கடந்த 2012-ம் ஆண்டு பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போதைய காங்கிரஸ் அமைச்சராக இருந்த நாராயணசாமி மசோதாவை தாக்கல் செய்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் எஸ்.சி.பிரிவு எம்.பி யஷ்விர் சிங், அமைச்சர் நாராயணசாமியின் கையில் இருந்த மசோதாவை பறித்துச் சென்றார்.
அப்போது மக்களவையில் இருந்த சோனியா காந்தி அவரது சட்டை காலரை பிடிக்க முயன்றார். அப்போது நான் சோனியா காந்தியிடம், ‘‘நீங்கள் இங்கு சர்வாதிகாரி அல்ல, நீங்கள் ராணி அல்ல. இங்கு நீங்கள் சண்டை போட முடியாது’’ என கூறினேன்.
இந்த விஷயத்தில் பாஜக தலையிடாமல் இருந்திருந்தால், எங்கள் எம்.பி.க்களை காப்பாற்றியிருக்க முடியாது என முலாயம் சிங் யாதவ் கூறினார். நீங்கள் எம்.பி.க்களை கொலை செய்ய முயன்றீர்கள். ஆனால், தற்போது, அவர்களுடன் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்துள்ளீர்கள்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 முறை எம்.பி.யாக இருந்த கீதா முகர்ஜி, பாஜகவின் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேசியுள்ளனர். அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். ஆனால் அவர்கள் பற்றி சோனியா காந்தி குறிப்பிடவில்லை. இது என்னவிதமான அரசியல்?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முதன் முதலில் கடந்த 1996-ம் ஆண்டு தேவகவுடா அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தாண்டு இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்ற போது, மறைந்த முன்னாள் எம்.பி. சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, குட்டை முடியுடன் இருக்கும் படித்த,நவீன பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டும்தான் உதவும் என்றார். இவ்வாறு நிஷிகாந்த துபே கூறினார்.
இவர் தெரிவித்த கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், பாஜக.,வின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க பெண் எம்.பி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றனர். அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘ பெண்கள் தொடர்பான விஷயத்தை ஆண் ஏன் எழுப்ப கூடாது? என்று தெரிவித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு மக்களவையில் நடந்த சம்பவம் பற்றிய பத்திரிகை செய்திகளில் கூறியிருப்பதாவது: அமைச்சர் நாராயணசாமியின் கையில் இருந்த மசோதா நகல்களை சமாஜ்வாதி கட்சி எம்.பி யஷ்விர் சிங் பறித்துச் சென்றார். அப்போது சோனியா காந்தி, யஷ்விர் சிங்கை பிடித்து ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என கேட்டார். அவரது கையில் இருந்த மசோதா நகல்களை சோனியா காந்தி பறிக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. சமாஜ்வாதி எம்.பி.க்கள் மீதான தாக்குதலுக்கு அப்போதைய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மறைந்த முலாயம் சிங் யாதவ் கண்டனம் தெரிவித்தார்.