இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனு

இரா.வினோத்

பெங்களூரு: தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்க உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர மனு தாக்கல் செய்தது.

டெல்லியில் கடந்த 18ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ‘‘அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்'' என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்ப‌ட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கர்நாடக அரசு 3 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலத்தை சேர்ந்த‌ அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்தார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு நேற்று அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ''கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இருப்பினும் தமிழகத்தின் வேளாண்மை தேவைகளுக்காக நீர் திறந்துவிட்டுள்ளோம்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 5ஆயிரம் கன அடி நீரை திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அணைகளில் நீர் இல்லாததால் எங்களால் திறக்க முடியாது. தற்போது இருக்கும் நீரை கொண்டு கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய இயலாது. தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியம் இல்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என கோரியுள்ளது.

இதனிடையே முதல்வர் சித்தராமையா, ‘‘காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இரு மாநில தலைவர்களையும் அழைத்து பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அவரால் மட்டுமே இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முடியும். இதில் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடப் பார்க்கின்றன'' என தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சரியாக செயல்படவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் கர்நாடகா தரப்பின் நியாயத்தை சரியாக‌ வெளிப்படுத்தவில்லை. இப்போது பிரதமர் மோடி தலையிடவேண்டும் என கேட்கிறார்கள். அவரை சந்திக்கவும் முயற்சிக்கிறார்கள். அவர் இந்த பிரச்சினையில் தலையிடுவதால் எந்தப் பயனும் ஏற்படாது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது பிரதமர் தலையிட முடியுமா? ம‌க்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமரை இந்த விவகாரத்தில் இழுக்க பார்க்கின்றனர்'' என்றார்.

SCROLL FOR NEXT