புதுடெல்லி: கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், "கனடாவில் அதிகரித்து வரும் இந்திய விரோத செயல்கள் மற்றும் அரசே மன்னித்துவிட்ட வெறுப்புக் குற்றங்கள், கிரிமினல் வன்முறைகள் ஆகியனவற்றைக் கருத்திக் கொண்டு கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கிறோம். அண்மைக் காலமாக அங்குள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய எதிர்ப்பு கொள்கைகளை எதிர்க்கும் இந்திய தூதரக அதிகாரிகள் குறிவைக்கப்படுகின்றனர். அதனால், கனடாவில் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனேடிய அரசு சில விஷயங்களை அறிவுறுத்தியது. கனடா அரசின் இணையதளத்தில், "பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்புக் கவலைகள் உள்ளன. நிலைமை விரைவாக மாறக்கூடும். எனினும், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்" என்று அறிவுறுத்தியது. தற்போது இந்தியா கனடா வாழ் இந்தியர்களை பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி: காலிஸ்தான் தனிநாடு கோரும் பஞ்சாபின் பிரிவினை ஆதரவாளர்களில் முக்கியமானவர் ஹர்தீப்சிங் நிஜார். இம்மாநிலத்தின் ஜலந்தர் மாவட்ட பர் சிங் புரா கிராமத்தை சேர்ந்த இவர், பிழைப்புக்காக கடந்த 1997-ல் கனடாவுக்கு இடம் மாறினார். ஹர்தீப்புக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் தீவிரவாத ஆதரவு நிலை நிலவுகிறது. இதனால், அங்கிருந்தபடி காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஹர்தீப். இந்த இரண்டு அமைப்புகளுமே இந்தியாவில் தடை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டவை.
ஹர்தீப்பை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு எனவும் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த வருடம் ஜுனில் அறிவிப்பை வெளியிட்டது. எனினும், இந்தியாவுக்கு எதிரான ஹர்தீப்பின் தேசவிரோத நடவடிக்கைகள் கனடா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வெளிப்படையாகத் தொடர்ந்தன. இச்சூழலில், ஹர்தீப் அவர் வசித்த கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் கடந்த ஜூன் 18-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.
இந்நிலையில், அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் கனடா பிரதமர் மற்றும் அதன் வெளியுறத் துறை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் ஹர்தீப் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்தி பேசினர். “இந்திய அரசின் முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று கூறினார்.
இதைக் கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது எனவும், இந்தியா சட்டங்களுக்கு உட்பட்ட நாடு என்றும் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார். இத்துடன், இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் கனடா, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
இத்துடன் கனடாவின் பிரதமர் ட்ரூடோ, இந்தியத் தூதரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இது இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இதற்கு பதிலடியாக, டெல்லியிலுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரியான ஒலிவியர் சில்வர்ஸ்டரை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.