புதுடெல்லி / பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு மேலும் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 24-வது கூட்டம் மத்திய நீர்வளத்துறை தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் அதனை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை. அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 12 ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தினார்.
அதற்கு கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங், ‘‘கர்நாடகாவில் நடப்பாண்டில் போதிய அளவில் மழை பொழியவில்லை. அணைகளில் குறைவான அளவில் நீர் இருப்பதால் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கே நீர் திறந்து விடப்படவில்லை. எனவே, தமிழகத்துக்கு தினசரி 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுகிறோம்'' என தெரிவித்தார்.
நிறைவாக பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்தஅளவில் பதிவான மழை ஆகியவற்றை கருத்தில் கொள்கிறோம். அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
விவசாயிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து அந்த அமைப்பினர் நேற்று மைசூரு, மண்டியா ஆகியஇடங்களில் போராட்டம் நடத்தினர். மண்டியா அருகே விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டை வறட்சிக்கு ஏற்றவாறு பங்கிட விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.
காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்குமாறு பரிந்துரை செய்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.