‘மரண தண்டனை குறித்த மேல் முறையீட்டு மனுக்களை இனி மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அறிவித்தார்.
மரண தண்டனை பெற்ற கைதிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் குறித்த விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜே.எஸ்.கேஹர், சலமேஸ்வர், சிக்ரி, ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமன், செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய முகமது ஆரிஃப் உள்ளிட்டோர் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடும்போது, ‘மரண தண்டனை பெற்றவர்கள் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் நீதிபதிகளின் அறையில் வைத்து விசாரிக்கப்படுகிறது. இதை நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால், உச்ச நீதிமன்ற விதிகள் 1966-ஐ திருத்த வேண்டும். மரண தண்டனை குறித்த முறையீடுகளை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சட்டக் கமிஷனும் பரிந்துரைத்துள்ளது’ என்றார்.
அப்போது தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ‘இதுதொடர்பான உச்ச நீதிமன்ற விதிகள் திருத்தப்பட்டுள்ளன. முன்னாள் தலைமை நீதிபதிகள் அல்தமஸ் கபீர், சதாசிவம் மற்றும் நான் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரை அனைத்து நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும். புதிய நடைமுறையின்படி, ஆகஸ்ட் 16-ம் தேதி மரண தண்டனை குறித்த அனைத்து மேல் முறையீட்டு மனுக்களையும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்’ என்றார்.