வாஷிங்டன் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் மோடி வரும் செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் வில்லியம் பர்ன்ஸ், டெல்லியில் பிரதமர் மோடியை வெள்ளிக் கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமா எழுதிய கடிதத்தை மோடியிடம் அவர் அளித்தார்.
அந்தக் கடிதத்தில், இந்தியா வுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது, 21-ம் நூற்றாண்டில் இருநாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தித் துறை, எரிசக்தித் துறை, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, உளவு தகவல் பரிமாற்றம், ஆப்கானிஸ்தான் விவகாரம், ஆசிய அரசியல் நிலவரம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஒபாமா தனது கடிதத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அழைப்பை ஏற்றார் மோடி
அதிபர் ஒபாமாவின் அழைப் புக்கு நன்றி தெரிவித்த மோடி, தனது அமெரிக்க பயணத்தின்போது நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும், இந்திய-அமெரிக்க உறவில் புதிய உத்வேகம் ஏற்பட வேண்டும் என்று கூறினார்.
உலகின் மிகப் பெரிய, பழமையான ஜனநாயக நாடுகளின் நட்புறவு உலகின் ஸ்திரத்தன்மை, செழுமை, அமைதிக்கு வழிவகுக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற தைத் தொடர்ந்து அதிபர் ஒபாமா இப்போது முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
தனது அமெரிக்கப் பயணத்தின்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திலும் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.