இந்தியா

மோடியை ஆதரிக்கும் கிரண் பேடியை பாஜகவில் இணைய அழைப்பு

செய்திப்பிரிவு

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியும், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் பாஜகவில் சேர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

நரேந்திர மோடிக்கு ஓட்டு:

வியாழக்கிழமை, தனது ட்விட்டர் பக்கத்தில்: "எனக்கு இந்திய தேசத்தின் நலனே பிரதானம். மத்தியில் நிலையான, ஸ்திரமான, பொறுப்பான நல்லாட்சி அமைய வேண்டும். அந்த வகையில் ஒரு வாக்களராக எனது ஓட்டு நரேந்திர மோடிக்குத் தான்" என கிரண் பேடி அவரது கருத்தை வெளியிட்டிருந்தார்.

காங்கிரசுக்கு எதிரான போராட்டம்:

இன்றும் அவர் மோடியை ஆதரித்து பேசியுள்ளார். நாட்டை வழிநடத்திச் சென்று நிலையான ஆட்சி செலுத்தும் தகுதி உடைய நபரை ஆதரிப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் போராட்டம் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானது தான் என அவர் தெரிவித்துள்ளார்.

2ஜி, காமன்வெல்த் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் என்ற ஊழல்களுக்கு எதிரானது இந்த அமைப்பு என்றும் அவர் தெரிவித்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தான் இவ்வளவு ஊழல்களிலும் ஈடுபட்டுள்ளது.

ஆட்சியில் இருக்கும் காங்கிரசுக்கு எதிரானது தான் தங்களது போராட்டம் என்றும், பாஜகவுக்கு எதிரானது அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.

'தொங்கு நாடாளுமன்றம் ஆபத்து'

மேலும் தேர்தலில் காங்கிரஸூக்கு வாக்களிக்க முடியாது, அது ஊழலில் திளைக்கிறது. காங்கிரஸை விட்டால் பெரிய தேசிய கட்சி பாஜக தான். எனவே பாஜகவுக்கே வாக்களிப்பேன். மற்ற கட்சிகளுக்கு ஓட்டளிப்பதால் எந்த உபயோகமும் இல்லை. தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், மோடியை பகிரங்கமாக ஆதரித்துள்ள கிரண் பேடியை பாஜகவில் சேர அழைக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT