இந்தியா

முதல்வர் மம்தா விரும்பினால் ராஜ்பவனுக்குள் போராட்டம் நடத்தலாம் - மேற்கு வங்க ஆளுநர் அனந்த போஸ் அழைப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: முதல்வர் மம்தா பானர்ஜி விரும்பினால் ராஜ்பவனுக்குள் பேராட்டம் நடத்தலாம் என மேற்கு வங்க ஆளுநர் அனந்த போஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்க அரசின் விருப்பத்துக்கு எதிராக பல்கலைக்கழங்களில் இடைக்கால துணை வேந்தர்கள் நியமனத்தை அறிவித்துள்ளார். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் அனந்த போஸ் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்நிலையில் ஆசிரியர் தின நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதன் மூலம் கூட்டாட்சி முறையில் தலையீடு உள்ளது. மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். அதனால் ராஜ்பவனுக்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளேன். அநீதியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எப்படி பேராடுவது என்பது பற்றி மேற்கு வங்கத்துக்கு தெரியும்’’ என்றார்.

இதுகுறித்து ஆளுநர் அனந்த போஸ் கூறும்போது, "எனது மதிப்பிற்குரிய விருந்தினர் முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தவிரும்பினால், அவர் ராஜ்பவனுக்குள் வந்து போராட்டம் நடத்தலாம்’’ என்றார்.

மேலும், துணைவேந்தர்கள் நியமனத்தில் 5 பேர் அடங்கிய தேர்வுக் குழு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்வு குழு பரிந்துரைகளை புறக்கணித்து ஆளுநர்தனது இஷ்டத்துக்கு துணைவேந்தர்களை நியமிக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

ஆளுநர் அனந்த போஸ் விடுத்துள்ள வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் முன்பு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் மீது ஊழல், பாலியல் தொந்தரவு, மற்றும் அரசியல் தலையீடு புகார்கள் கூறப்பட்டன. ராஜினாமா செய்த 5 துணைவேந்தர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் வந்ததாக என்னிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். மாநில அரசின் நியமனங்கள் சிலவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், இடைக்கால துணைவேந்தர்களை நான் நியமித்தேன்.

பல்கலைக்கழகங்கள் வன்முறையில் இருந்து விடுபட்டு நாட்டிலேயே சிறந்ததாக விளங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். கல்வி நிறுவனங்களை ஊழல் அற்றதாக மாற்ற ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தா ஆகியோர் பெயரில் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரூ.40,000 சம்பள உயர்வு: மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்குவங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மிக குறைவாக உள்ளது. அதனால் அவர்களின் சம்பளத்தை மாதத்துக்கு ரூ.40,000 ஆயிரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் நீண்ட காலமாக சம்பளம் பெறாததால், முதல்வர் சம்பளத்தில் மாற்றம் இல்லை’’ என்றார்.

வங்காள தினம் தீர்மானம்..: பிரிவினையின்போது ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு ஆதரவாக மேற்கு வங்க எம்எல்ஏ.,க்கள் கடந்த 1947-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வாக்களித்தனர். அந்நாளை, வங்காள தினமாக கொண்டாட வேண்டும் என பாஜக எம்எல்ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலை வங்காள புத்தாண்டு தினமான பொய்லா பைசாக் தினத்தை வங்காள தினமாகவும், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்காள மண், வங்காள நீர் பாடலை மாநில பாடலாகவும் அறிவிக்க மேற்கு வங் சட்டப் பேரவையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 167 எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT