புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று ஐரோப்பிய நாடுகளுக்கு தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ராகுல்காந்தி ஐரோப்பிய யூனியன் வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் ஆகியோரை தனது பயணத்தின்போது சந்தித்துப்பேசவுள்ளார்.
வரும் 8-ம் தேதி பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து 9-ம் தேதி பாரிஸில் உள்ள பிரான்ஸ் தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசவுள்ளார்.
பிரான்ஸில் இருந்து நார்வே செல்லும் அவர், தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அப்போது இந்திய வம்சாவளியினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து வரும் 11-ம்தேதி ராகுல் இந்தியா திரும்புகிறார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இதையொட்டி, டெல்லியில் ஜி-20 உச்சிமாநாடு வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறும் நாட்களில் ராகுல் காந்தி, தனது ஐரோப்பிய பயணத்தைத் திட்டமிட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.