சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராமின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகி உள்ள மற்றொரு மனுவில் அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆசிரமத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக சாமியார் ஆசாராம் பாபு (79) மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது ராஜஸ்தான் ஜோத்பூர் ஆசிரமத்திலும் பாலியல் குற்றம் புரிந்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட ஆசாராம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டனர்.
ஜோத்பூர் ஆசிரமம் தொடர்பாக பதிவான வழக்கில், ஜாமீன் மனுவை விசாரிக்க சம்மதம் தெரிவித்த நீதிபதிகள், ராஜஸ்தான் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு மட்டுமின்றி, 16 வயது பெண்ணை துன்புறுத்தியதால், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, புகார் அளித்த பெண் சம்பவம் நடந்தபோது, 18 வயதைத் தாண்டி விட்டார் என்பதற்கான ஆதாரத்தை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆசாராம் அனுமதி கோரியிருந்தார்.
இம்மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இம்மனுக்கள் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.