பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் உள்ள மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனால் மண்டியாவில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்துள்ளது.
இதனால் கோபமடைந்துள்ள கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் மண்டியாவில் உள்ள கே.ஆர்.சதுக்கத்தில் கர்நாடக அரசை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே சிலர் பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறிக்க முற்பட்டதால் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
கிருஷ்ணராஜசாகர் அணை அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்ணா அருகே கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆற்றில் இருந்து மேலே ஏற்றினர். தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரை நிறுத்தும்வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.