இந்தியா

தெலங்கானா மாநிலத்தில் குழந்தை பிறந்தவுடன் ஆதார்

எம்.மகேஷ்குமார்

மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களில் தொடங்கி, வங்கிக் கணக்கு, தொலைபேசி இணைப்பு என விரிவடைந்து தற்போது ஏழுமலையானை தரிசிக்கவும் ஆதார் அட்டை அவசியமாகி விட்டது. நம் நாட்டில் 115 கோடி பேர் ஆதார் மூலம் இணைந்துள்ளதாகவும் இந்தியாவின் ஆதார் தகவல் தொகுப்பே உலகின் மிகப்பெரிய தகவல் தொகுப்பு என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதற்கேற்ப ஆதார் அட்டை வழங்கும் பணியில் தெலங்கானா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இங்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுக்காக்களில் நிரந்தர ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தெலங்கானா அரசு பிறந்த குழந்தைக்கும் ஆதார் எண் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி மருத்துவமனைகளில் குழந்தை பிறந்ததும், அடுத்த சில நிமிடங்களில் அக்குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படுகிறது. பெற்றோரின் புகைப்படங்கள், கைரேகை ஆகியவையும் சேர்த்து அந்தக் குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. ஓரிரு நாட்களில் ஆதார் அட்டையும் வழங்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆதார் அட்டையை அந்த குழந்தைக்கு 5 வயது வரை பயன்படுத்தலாம். பின்னர் ஆதார் மையங்களில் பழைய அட்டையை கொடுத்து, குழந்தையின் பெயர், கைரேகையை பதிவு செய்து புதிய அட்டையை வாங்கிக் கொள்ளலாம். என்றாலும் முதலில் கொடுத்த ஆதார் எண் மாறாது.

SCROLL FOR NEXT