இந்தியா

வட மாநிலங்களில் பலத்த மழை இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்டில் நிலச்சரிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்திப்பிரிவு

நாட்டின் வட மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட்டில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் பாயும் நதிகளில் அபாய அளவுக்கு மேலாக தண்ணீர் பாய்கிறது.

தலைநகர் டெல்லியிலும் மழை பெய்தது. 92 சதவீத அளவுக்கு ஈரப்பதம் நிலவியதால் நகரவாசிகள் இன்னல் அடைந்தனர்.

மின்சாரம் துண்டிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. ஆங்காங்கே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. தலைநகர் சிம்லாவின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

வேருடன் சாய்ந்த மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாநிலத்தில் பாயும் பல முக்கிய நதிகள், கிளைநதிகளில் அபாய அளவுக்கு மேலாக தண்ணீர் பாய்கிறது.

வானிலை ஆய்வு நிலைய தகவல்படி தர்மசாலாவில் மாநிலத்திலேயே அதிக அளவாக 119 மிமீ மழை பதிவாகி உள்ளது. சிம்லா, ஜுப்பர்ஹாட்டி பகுதிகளில் 89 மிமீ, 60 மிமீ மழை பதிவானது. புதன்கிழமையும் மாநிலத்தில் மழை தொடர்ந்து பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் வெள்ளம்

உத்தராகண்டிலும் பலத்த மழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறுகள் கரைபுரண்டோடுகின்றன. கேதார்நாத்,பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் யாத்திரை தடைபட்டுள்ளது. நதிகள் வழிந்தோடுவதால் சமவெளிப்பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரிஷிகேஷில் பாயும் கங்கை நதியில் அபாய அளவான 339.50 மீட்டருக்கு சற்று குறைவாக 339.03 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் பாய்கிறது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணாவிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்கிறது. அஸாம் மாநிலம் சோனிட்பூர் பகுதியில் ஆறுகளில் மழைநீர் கரைபுரண்டோடுவதால் 15 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT