அகமதாபாத்: நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் கந்தகம் (சல்ஃபர்) இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
(இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி தென்துருவத்தில் தரையிறங்கியது. பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றன. செப்டம்பர் 3-ம் தேதி வரை லேண்டரும் ரோவரும் ஆய்வு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லேண்டர் மற்றும் ரோவரின் செயல்பாட்டை பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இஸ்ரோ கண்காணித்து வருகிறது. அதோடு லேண்டர், ரோவர் அனுப்பும் படங்களை இஸ்ரோ பகிர்ந்து வருகிறது. அதோடு நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த கருவிகள் அனுப்பும் தகவலையும் இஸ்ரோ பகிர்ந்து வருகிறது.
அந்த வகையில் நிலவின் தென்துருவத்தில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. “ரோவரில் உள்ள எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராப் மற்றும் லேசர் Induced ஸ்பெக்ட்ரோகிராப் துணையுடன் தென்துருவத்தில் கந்தகம் (தனிமம்) இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது” என இஸ்ரோவின் விண்வெளி அப்ளிகேஷன் மையத்தின் இயக்குனர் நிலேஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.