இந்தியா

ஊதிய உயர்வுக்காக 43 ஆண்டு போராடிய துப்புரவு தொழில் சகோதரிகள்

இரா.வினோத்

அக்கு, லீலா என்ற இரண்டு துப்புரவு தொழிலாளிகள் ஊதிய உயர்வு கோரி 43 ஆண்டு காலம் போராடி வெற்றி பெற்றிருக் கின்றனர்.

அக்கு (62), லீலா(63) இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் குடிசைப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அங்குள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர்.

இவர்களது மாத சம்பளம் 15 ரூபாய் மட்டுமே. ஊதிய உயர்வுக் காக ஆட்சியாளர்களின் அலுவலக படிக்கட்டுகளை ஏறி பலன் கிடைக்காததால், 1998-ல் நீதிமன்ற படிகளில் ஏற ஆரம்பித்தார்கள். மாவட்ட அமர்வு நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என தொடர்ந்து போராடியதன் விளைவாக அவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “அக்கு, லீலா ஊதியப் பிரச்சினையில் கர்நாடக அரசு பாராமுகமாக நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. அவர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கவும், இத்தனை ஆண்டுகளாக தராமல் இழுத்தடித்த நிலுவை ஊதியத்தொகையையும் சேர்த்து இருவருக்கும் தலா ரூ.3.68 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

தீர்ப்பு வெளியாகி 6 மாதங்கள் கழித்து இருவருக்கும் நிலுவை தொகையை வழங்குமாறு கடந்த வியாழக்கிழமை அரசு உத்தரவிட்டது.

துயர வாழ்க்கை

பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் ‘தி இந்து’செய்தியாளரிடம் கூறியதாவது: “நாங்கள் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்க அப்பா, தாத்தா காலத்தில இருந்தே வீதி கூட்டுறது, பாத்ரூமை கழுவுவது போன்ற வேலை செஞ்சிட்டிருக்கோம். 1971-ல் ஆசிரியர் பயிற்சி மையத்துல வேலைக்கு சேர்ந்தோம். எங்களுக்கு மாதம் 15 ரூபாய் சம்பளம். தற்காலிக பணியாளர்களை கர்நாடக அரசு 1984-ல் நிரந்தரம் செய்தது. ஆனால் எங்களை மட்டும் நிரந்தரம் செய்ய வில்லை. 15 ரூபாயில் குடும்பத்தை சமாளிக்க முடியலை.1998-ல் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தோம். பிறகு உடுப்பி கோர்ட்டில் கேஸ் போட்டோம். நிர்வாகத்துக்கு கெட்டப் பேரு உண்டாக்கிவிட்டதாக வேலையை விட்டு அனுப்பிவிட்டார்கள். ஆசிரியர் பயிற்சி மைய வாசலில் உண்ணாவிரதம் இருந்தோம். ஒருகட்டத்தில் மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. ஆனால் சம்பளம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. 2003 வரைக்கும் சம்பளம் இல்லாமல் வேலை செஞ்சோம்.

அதன் பிறகு எங்களைப் பற்றி அறிந்து மனித உரிமை பாதுகாப்பு அமைப்பினர் உதவ முன்வந்தாங்க. தொழிலாளர் கோர்ட், கர்நாடக மனித உரிமை ஆணையம் என பல இடங்களுக்கு விஷயத்தை கொண்டுபோனாங்க.

2005-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு போட்டோம். 2010-ல் ஐகோர்ட் எங்களுக்கு வேலை நிரந்தரம் செய்து, சேர வேண்டிய பணத்தை கொடுக் கும்படி உத்தரவு போட்டது.

அரசாங்கம் அதை கிடப்பில் போட்டது. 2011-ல் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தோம். 2012-ல் சுப்ரீம் கோர்ட் எங்கள் இருவருக்கும் தலா ரூ. 2.11 லட்சம் கொடுக்கும்படி உத்தரவிட்டது. அதையும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தோம். அதன்பிறகு 2014 ஜனவரி மாதம் ‘இன்னும் 90 நாட்களில் இருவருக்கும் தலா 3.68 லட்சம் ரூபாய் கொடுக்கும்படியும் தரவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுப்போம்’என்றும் உத்தரவு போட்டது.

ஆனால் அரசு எங்களுக்கு பணத்தைக் கொடுக்கவில்லை. மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். கடந்த 4-ம் தேதி உடனடியாக பணம் கொடுக்கனும்னு அரசுக்கு உத்தரவிட்டது.

கடைசியாக அரசாங்கம் எங்களுக்கு இப்போது பணத்தை கொடுத்தது. 43 வருஷமாக போராடியதால் நல்ல முடிவு கிடச்சிருக்கு. எங்களுக்கு நியாயம் கிடைக்க முக்கிய காரணம் மனித உரிமை பாதுகாப்பு மையமும் அதன் தலைவர் ரவீந்திரநாத்தும் தான் காரணம்” என கண்ணீர் மல்கக் கூறினார்கள்.

இதுகுறித்து, மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் ஷாம்பாக் கூறியதாவது: ''கர்நாடகாவில் அக்கு, லீலா இருவரையும் தெரியாதவர்கள் யாருமில்லை. அப்பாவி தலித்துகள். அவர்களுக்கென்று போராட எந்த அமைப்பும் முன்வராததால் நாங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்தோம்.

இருவருக்கும் தலா ரூ.3.68 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். 43 ஆண்டு களாக மாதம் 15 ரூபாயை ஊதியமாக வாங்கிக்கொண்டு வேலை பார்த்த அவர்களுக்கு நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

அக்கு, லீலா என்ற இரு துப்புரவு தொழிலாளிகளுக்கு கிடைத்த வெற்றி ஒட்டுமொத்த எளிய மனிதர்களுக்கான வெற்றி' என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT