இந்தியா

ஒக்கி புயலில் சிக்கி மீட்கப்படாத தமிழக மீனவர்கள் 400 பேர்: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

ஒக்கி புயலில் சிக்கிய, தமிழக மீனவர்கள் 400 பேர் உட்பட, 661 மீனவர்கள் இன்னமும் மீட்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஒக்கி புயலால் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டமும், கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி காணாமல் போயினர்.

அவர்களை மீட்கும் பணியில், மாநில அரசுகளுடன் இணைந்து, கடலோரக் காவல்படையும், கடற்படையும் ஈடுபட்டன. எனினும் மீனவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுக்கவில்லை என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டினர். இதுவரை காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை குறித்தும் தகவல்கள் வெளிவராமல் இருந்தன. இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்கள் பற்றி விவரங்களை மத்திய பாதுகாப்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் காணாமல் போன மீனவர்களை மீட்க விரிவான தேடுதல் பணி நடந்தது. கடலோர காவல்படை மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் பணியின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 453 மீனவர்களும், கேரளாவைச் சேர்ந்த 352 மீனவர்களும், லட்சத்தீவைச் சேர்ந்த 30 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மீனவளத்துறை தந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 400 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 261 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அதேசமயம் லட்சத்தீவைச் சேர்ந்த மீனவர்கள் வேறு மீனவர்கள் யாரும் காணாமல் போகவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT