இந்தியா

நாடாளுமன்ற பாதுகாப்புக்கு 1,500 கமாண்டோ வீரர்கள்

செய்திப்பிரிவு

துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பி.டி.ஜி என்ற புதிய படைக் குழு நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் பணியில் வியாழக்கிழமை முதல் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

அங்கு ஏற்கெனவே பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் டெல்லி போலீஸார், நாடாளுமன்றப் பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களுடன் இணைந்து இந்த புதிய துணை ராணுவப் படைக் குழுவும் செயல்படும்.

2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற குழு ஒன்றை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கென நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1,500 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்குழுவுக்கு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணிக் குழு (பி.டி.ஜி.) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியை கவனித்து வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புப் பணியை, இப்புதிய பாதுகாப்புப் பணிக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற பிரதான கட்டிடம், வரவேற்பு அலுவலகம், நூலகம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் பணியிலும், நாடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்கள், வி.வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இந்த புதிய படைக் குழு ஈடுபடும்” என்றார்.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதையடுத்து வரும் 7-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இப்புதிய படைக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT