ஏதென்ஸ்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கிருந்து அவர் நேற்று கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் சென்றார்.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு கிரீஸ் அதிபர் கேத்ரினாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அந்த நாட்டின் 2-வது உயரிய "தி கிரான்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர்" விருதை அதிபர் கேத்ரினா, பிரதமர் மோடிக்கு வழங்கினார். கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: 140 கோடி இந்தியர்களின் சார்பாக விருதைப் பெற்றுக் கொள்கிறேன். இதற்காக இந்தியாவின் சார்பில் கிரீஸுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வேளாண் துறையில் இந்தியா, கிரீஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகளின் வர்த்தகம் இரு மடங்காக உயரும். பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். குறிப்பாக இந்திய, பசிபிக் பகுதி, மத்திய தரைக்கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவும் கிரீஸும் உறுதி பூண்டுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
2,500 ஆண்டு கால உறவு: கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் வெளியிட்ட அறிக்கையில், “சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கும் கிரீஸுக்கும் இடையே உறவு நீடிக்கிறது. அந்த உறவு இப்போது மேலும் வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளின் விமானப்படை, கடற்படைகள் இணைந்து அண்மையில் போர் ஒத்திகை நடத்தின. ஐரோப்பாவில் இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக கிரீஸ் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கிரீஸ் உறவு முக்கியம்: சர்வதேச அரங்கில் துருக்கியும் பாகிஸ்தானும் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு அதிநவீன டிபி2 ரக ட்ரோன்களை துருக்கிவழங்கியுள்ளது.
இது, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக மத்திய அரசு கருதுகிறது. அதோடு ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரத்தை துருக்கி அடிக்கடி எழுப்பி வருகிறது.
துருக்கி, பாகிஸ்தானின் ஆதிக்கத்தை முறியடிக்க துருக்கியின் எதிரி நாடான கிரீஸ் உடன் இந்தியா கைகோத்துள்ளது. இதன்படி துருக்கியின் டிபி2 ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது தொடர்பான வியூகங்களை வழங்க கிரீஸ் முன்வந்துள்ளது.