அமராவதி: வரலட்சுமி விரத விழா ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனால் அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் ஆஸ்தான மண்டபத்தில் தாயாருக்கு வரலட்சுமிவிரத விழா சிறப்பு பூஜைகள்செய்யப்பட்டன. இதில் 2 டன்மலர்கள் உபயோகப்படுத்தப்பட்டன. தங்க புடவையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தாயார், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாரங்கல் பத்ரகாளி அம்மன், விஜயவாடா கனக துர்கையம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி கோயில்கள் என ஆந்திரா மற்றும்தெலங்கானாவில் உள்ளமுக்கிய அம்மன் கோயில்களில்அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டிருந்தது.
இதில், கிழக்கு கோதாவரி மாவட்டம், கடியபு லங்கா பகுதியில் உள்ள முசலம்மா தல்லி கோயிலில் மகாலட்சுமிக்கு ரூ. 13.25 லட்சம் மதிப்பிலான ரூ. 500, 200, 100, 20 போன்ற புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை காண பக்தர்கள் திரண்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.