புதுடெல்லி: பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கு பிரதமர் மோடி, சுராஹியை (உலோக குடுவை) பரிசாக வழங்கினார். இது தெலங்கானாவை சேர்ந்த கைவினை தயாரிப்பு ஆகும்.சிரில் ரமபோசாவின் மனைவி ஷிபோவுக்கு, நாகாலாந்து பழங்குடி மக்களின் கைவினை தயாரிப்பான சால்வை வழங்கினார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தின் கோண்ட் பழங்குடி மக்கள் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். மண், செடி, கொடிகள், இலைகள், பசுவின் சாணம், சுண்ணாம்பு கல் ஆகியவற்றின் மூலம் கோண்ட் பழங்குடி மக்கள் வரையும் இந்த ஓவியங்கள் உலக அளவில் பிரபலமானவை.