மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 
இந்தியா

புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதியப் பாடத்திட்டங்கள் தயாராகிவிட்டதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024-ம்கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இனி பள்ளி பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். தற்போது ஆண்டுக்கு ஒரு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள்அதிக பாடச் சுமையை எதிர்கொள்கின்றனர். பாடச் சுமையை குறைக்கும் வகையில், பொதுத்தேர்வுகள் ஒரே தேர்வாக இல்லாமல், இரண்டு செமஸ்டர்களாக நடத்தப்படும்.

இதனால், மாணவர்களுக்கு போதிய நேரமும், தேர்வை சிறப்பாக எழுதுவதற்கான வாய்ப்பும் அமையும். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக புரிந்து படிக்கும் சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

“பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுவதால், மாணவர்கள் சிறப்பாக செயல்பட போதிய அவகாசம் கிடைக்கும். இதனால், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும்” என்று புதிய பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதிய பாடத்திட்டத்தின்படி 11 மற்றும் 12-ம் வகுப்புமாணவர்கள் இரண்டு மொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். அவற்றில் ஒன்று இந்திய மொழியாக இருக்கவேண்டும். அதேபோல், மாணவர்கள் கலை, அறிவியல், வணிகம்என்ற பிரிவுக்குள் குறுக்கிக் கொள்ளாமல், அவர்களுக்கு விருப்பமான பல்துறை பாடங் களை தேர்வு செய்துகொள்ள முடியும்.

புதிய பாடத்திட்டம் மாணவர்களின் நலனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்தத் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT