இந்தியா

திபெத் உரிமைகளை மீட்க இந்தியா முழுதும் பேரணி: திபெத் இளைஞர் காங்கிரஸ் முடிவு

ஹாஸ்மிகா

திபெத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் எனவும், சீனாவில் தயாரித்த பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் திபெத் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

திபெத்தை சீனா நீண்ட காலமாக ஆக்கிரமித்து வருவதாக திபெத் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. இதை வலியுறுத்தி உலக மனிதநேய தினத்தை (டிச.10) முன்னிட்டு, திபெத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் எனவும், சீனாவில் தயாரித்த பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் திபெத் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய – திபெத் நட்பு மன்றத்தின் செயலாளர், ஹ்யுபேர்ட் அளித்த பேட்டி:

“திபெத் மக்களுக்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து, மனித உரிமை நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். நாளை சென்னையில், மெரினா கடற்கரையில் காலை 6 மணியளவில் மக்களை சந்தித்து, திபெத் மக்களுக்கு நடக்கும் அநீதிகள் குறித்து பரப்புரை நடத்த உள்ளோம்.

இதுகுறித்து தமிழக எம்.எல்.ஏ-க்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம். தமிழக மக்கள் சீனாவில் தயாரித்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்திய – திபெத் உறவை பலப்படுத்த சர்வதேச அரங்கில் இந்தியா திபெத்தை ஆதரிக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக பாரத் ஜக்ரான் சுற்றுப்பயணத்தை நாளை முதல் தொடங்க உள்ளோம். இந்தியா முழுவதும் 150 நகரங்களில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT