காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சியாக இருக்க அந்தஸ்து இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாத்கி கூறியிருப்பது, அரசியல் உயர்மட்டத்தினரை மகிழ்விப்பதற்காக அவர் கூறும் கருத்து என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில்: "அட்டர்னி ஜெனரல் தனது அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
அட்டர்னி ஜெனரல், இத்தகைய முடிவுக்கு வர எந்த சட்டப் பிரிவை மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இருப்பினும், அட்டர்னி ஜெனரல் பரிந்துரையை சபாநாயகர் நிராகரிப்பார் என நம்புகிறோம். இது மக்களவை சபாநாயகருக்கும், இந்திய நாடாளுமன்ற சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய சவால்" என்றார்.
முன்னதாக அட்டர்னி ஜெனரல் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜனுக்கு அனுப்பிய அறிக்கையில்: "காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்து கோர எந்த முகாந்தரமும் இல்லை. மக்களவை வரலாற்றில் இது போன்றதொரு நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கவில்லை. அதனால், காங்கிரஸ் அப்படி ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டி தங்களுக்கும் அதன் அடிப்படையில் எதிர்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரவும் வழிவகை இல்லை" என தெரிவித்திருந்தார்.
மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்கட்சி அந்தஸ்து பெற தேர்தலில் 10% வாக்குகளாவது பெற்றிருக்க வேண்டும். 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.