புதுடெல்லி: டெல்லியின் ஜந்தர் மந்தரில் நூ மதக்கலவரத்தின் மீது மகா பஞ்சாயத்து நடத்தப்பட்டது. இதில், ‘ஜிகாதிகள், தீவிரவாதிகளின் கூடாரமான நூ’ என ஆத்திரமூட்டும் உரைகள் நிகழ்த்தப்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டது.
ஹரியானாவின் நூவில் இந்துத்துவா அமைப்புகள் கடந்த ஜுலை 31 இல் நடத்திய ஆன்மிக ஊர்வலம், மதக்கலவரமாக மாறியது. இக்கலவரம், நூவை சுற்றியுள்ள பல்வல், குருகிராம், பரீதாபாத் மற்றும் ஆகிய நகரங்களிலும் பரவியது.
இதனால், வெளிமாநிலங்களிலிருந்து பிழைக்க வந்த பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் ஊருக்கு திரும்பி விட்டனர். அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் ஹரியானா போலீஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு அமைதி திரும்புகிறது.
இந்நிலையில், நேற்று டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய சனாதன சங்கம் மற்றும் இதர சில இந்துத்துவா அமைப்பினர் சார்பில் மகாபஞ்சாயத்து நடத்தப்பட்டது. பல்வேறு நிபந்தனைகள் இதை நடத்த டெல்லி போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.
இதில், குறிப்பாக இதர மதத்தினர் பற்றி யாரும் பேசக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மீறும் வகையில், ‘ஜிகாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கூடாரமாக நூ மாறிவிட்டது. இதை தடுத்து நிறுத்த அங்கு நிரந்தரமாகப் பாதுகாப்பு போலீஸாரை அமர்த்த வேண்டும்.’ என இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு குப்தா பேசியிருந்தார்.
காஜியாபாத்தின் தாஸ்னா மடத்தின் அதிபரான யத்தி நரசிம்மாணந்தார், ‘இந்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தும், முஸ்லிம்கள் அதிகரித்தும் வரும் நிலையால் ஆயிரம் வருடத்திற்கு முன்பான வரலாறு திரும்பிவிடும் போல் உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்காள்தேஷில் இந்துக்களுக்கு ஏற்பட்டு வரும் நிலை இந்தியாவில் நிகழும் அச்சம் எழுந்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
இந்த பஞ்சாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறும் வகையில் பல நூறுபேர் அங்கு கூடியிருந்தனர்.
இக்கூட்டத்தில் எழுந்த ஆத்திரமூட்டம் பேச்சுகளால், மகாபஞ்சாயத்தில் இடைமறித்த டெல்லி போலீஸார் அதை தடுத்து நிறுத்தினர். துறவியான யத்தி நரசிம்மாணந்தை அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுபோல், ஆத்திரமூட்டும் மற்றும் மதவாதப் பேச்சுக்களால் துறவியான யத்தி நரசிம்மாணந்த் மீது பல வழக்குகள் ஏற்கெனவே பதிவாகி உள்ளன. ஹரியானா மதக்கலவரத்தில் இதுவரை 60 வழக்குகள் பதிவாகி, 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.