முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது.
இதனையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் வந்துள்ளனர். கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாளும் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியும் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.
வழக்கு பின்னணி:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திமுகவை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான வழக்குகளை, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதி, ஓ.பி.சைனி வழக்கை விசாரித்து வருகிறார். 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.