மும்பை: மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ஜூலை 6-ம் தேதி ஒரே நாளில் 523 மரங்கள் விழுந்துள்ளன. கோரேகான், குர்லா, மாதுங்கா மற்றும் தாதர் ஆகிய பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்ததால் மும்பையில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மும்பையில் நேற்று விமான சேவை பாதிக்கப்பட்டது.
ஜூன் 30-ம் தேதி செம்பூரில் பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்ததில் விஹான் ஸ்ரீவஸ்தவ் (11) என்ற மாணவன் உயிரிழந்தான். இச்சம்பவத்தில் மேலும் 4 குழந்தைகள் காயமடைந்தனர்.
ஜூலை 5-ம் தேதி ஆரே காலனியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரக்கிளை விழுந்ததில் ஹசன் ரசா (18) உயிரிழந்தார். ஜூலை 6-ம் தேதி குர்லா மேற்கில் கடை ஒன்றின் மீது மரம் விழுந்ததில் யுனுஸ் குண்டா வாலா (63) உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு பிஎம்சி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்சமாக 448 மரங்களும், கிழக்குப் புறநகர்ப் பகுதிகளில் 340 மரங்களும், நகரப் பகுதியில் 336 மரங்களும் விழுந்துள்ளன. திட்டமிடப்படாத கட்டுமானங்கள், மரங்களின் வேர்களைச் சுற்றி கான்கிரீட் போடுவது மற்றும் முறையான பராமரிப்பின்மை ஆகியவையே மரங்கள் பலவீனமடையக் காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வாரம் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், வாகனங்களை மரங்களின் அடியில் நிறுத்த வேண்டாம் என்றும், சாய்ந்த மரங்கள் குறித்து உடனடியாக மாநகராட்சிக்குத் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லியிலும் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.