புதுடெல்லி: சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தின் நிதி மாவட்டத்தில் உள்ள கோபுரம் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் 2 இந்தியர்கள், 3 நேபாளிகள், 2 சவுதி குடிமக்கள், 4 எகிப்தியர்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள், பொருளாதார, எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைக்கும் இத்தகைய தாக்குதல்கள் சவுதியின் இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியப் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைப்பதாகவும் இந்தியா நேற்று தெரிவித்தது.
சவுதி அரசுக்குத் முழு ஆதரவை தெரிவித்த இந்தியா, தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. காயமடைந்த இந்தியர்களுக்கு ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகம் உதவி வருகிறது. ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா நகரங்களுக்கான விமானங்களை நவம்பர் 30 வரை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.
பிப்ரவரியில் தொடங்கிய மேற்கு ஆசிய மோதல்களால் இதுவரை 24 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அக்டோபரில் ரியாத் மற்றும் தம்மாம் விமான நிலையங்கள் மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். சவுதியில் 45 லட்சம் இந்தியர்களும், ஒட்டுமொத்த மேற்கு ஆசியாவில் 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.