இந்தியா

கோவா மதுபான விடுதியில் பெண்ணிடம் தவறாக நடந்ததாக புகார் - தமிழரான டிஐஜி பணியிடை நீக்கம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கோவாவில் டிஐஜி பதவியில் அமர்த்தப்பட்டவர் டாக்டர் ஏ.கோன். பணியின்போது, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி கோவாவின் பகா காலன்கட் கடற்கரையிலுள்ள இரவு மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.

இந்த மதுபான விடுதியில் பெண் சுற்றுலாப் பயணி ஒருவருடன் அதிகாரி கோனுக்கு ஏதோ சிலகாரணங்களால் வாய்த் தகராறுநிகழ்ந்துள்ளது. இதில், கோபமடைந்த அப்பெண், டிஐஜி கோனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகள்கோவாவில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தப் பிரச்சினையை கோவா சட்டப்பேரவையில் பார்வார்ட் கட்சி எம்எல்ஏ விஜய் சர்தேசாய், பாஜக எம்எம்ஏ மைக்கேல் லோபோ ஆகியோர் கடந்த புதன்கிழமை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பிரமோத் சாவந்த், “இதுபோன்ற சம்பவங்களை அரசு ஏற்கவில்லை. இதற்கு காரணமான அதிகாரி கோன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து கோவா அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பணியிடை நீக்க உத்தரவு நேற்றுமுன்தினம் மாலை வெளியாகியுள்ளது. இதில் விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக உத்தரவில், “அகில இந்திய பணியாளர்கள் சட்டம் 1969-ன் 3 மற்றும் 20-வது பிரிவின்படி, ஏ.கோன் ஆகஸ்ட் 11 முதல் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் ஏ.கோன். எம்பிபிஎஸ் பட்டதாரியான இவர் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர். குடிமைப்பணி தேர்வில் 2009-ல் ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு அக்முட் (அருணாச்சலபிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்) பிரிவு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் துணை ஆணையர்களில் ஒருவராகப் பணியாற்றிய இவர், தனது பணிநேர்மைக்கு பெயர் பெற்றவர். அதேநிலையில் கோவாவிலும் பணியாற்றிய இவருக்கு பல எதிரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சூழலில் கோனின் பணியிடை நீக்கம் பலருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT