இந்தியா

மக்களவைத் தேர்தல் இப்போது நடைபெற்றால் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி - டைம்ஸ் நவ், இடிஜி கருத்துக்கணிப்பில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் இப்போது தேர்தல் நடைபெற்றால் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதன்படி ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 15-ம் தேதி தனது சுதந்திர தின உரையில், வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு மறுநாள் இந்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

டைம்ஸ் நவ் – இடிஜி நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் நாட்டில் தற்போது தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 296 முதல் 326 வரையிலான இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 160 முதல் 190 வரையிலான இடங்களில் வெல்லும் என தெரியவருகிறது.

வரும் தேர்தலில் என்டிஏ அதிகபட்சம் 326 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டாலும் கடந்த 2019 தேர்தலில் என்டிஏ பெற்ற தொகுதிகளைவிட இது குறைவாகும். எனெனில் கடந்த தேர்தலில் என்டிஏ 353 இடங்களை பெற்றுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து இண்டியா கூட்டணியை அமைத்துள்ள போதிலும் மத்தியில் என்டிஏ அணியை ஆட்சியில் இருந்து அகற்ற இந்த முயற்சிகள் போதாது என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் என்டிஏ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் எனவும் இங்கு அதன் வெற்றி விகிதம் 80 சதவீதமாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. வட மாநிலங்களில் மோடி அலை தொடரும் எனவும் குஜராத், ம.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை என்டிஏ பெறும் எனவும் கூறப்படுகிறது. இம்மாநிலங்களில் மொத்தமுள்ள 80 இடங்களில் 70 இடங்களை ஏன்டிஏ பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் இக்கூட்டணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணிக்கு 30-34 (57.2%) இடங்களிலும் என்டிஏ-வுக்கு 4-8 (27.8%) இடங்களிலும் வெற்றி வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கர்நாடகாவில் இண்டியா கூட்டணிக்கு 8-10 (43.3%) இடங்களிலும் என்டிஏ-வுக்கு 18-20 (44.6%) இடங்களிலும் வெற்றி வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மற்றும் பிஹாரில் என்டிஏ-வுக்கு இண்டியா கூட்டணி கடும் போட்டியை ஏற்படுத்தும். என்றாலும் பிஹாரில் என்டிஏ 22-24 இடங்களிலும் இண்டியா கூட்டணி 16-18 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமையை யாத்திரை வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை விட பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா முழக்கம் வரும் தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT