‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார். பல்வேறு நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்கவிருப்பதால், இப்பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் ஆறாவது மாநாடு வரும் 15,16-ம் தேதிகளில் பிரேசிலில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பிரேசில் புறப்பட்டுச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை இரவு பெர்லினில் தங்கிவிட்டு திங்கள்கிழமை பிரேசிலில் உள்ள வடகிழக்கு கடற்கரை நகரமான ஃபோர்டலிசா செல்கிறார். அங்கு மாநாட்டில் பங்கேற்கிறார்.
பிரதமருடன் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஏ.கே.தோவல், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங், நிதித்துறை செயலர் அரவிந்த் மாயாராம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
பிரேசில் புறப்படும் முன்பு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஃபோர்டலிசா மற்றும் பிரேசிலியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரும்படி, அந்நாட்டு அதிபர் தில்மா ரவுசஃப் அழைத்ததன் பேரில், மாநாட்டில் பங்கேற்கச் செல்கிறேன். உலக பொருளாதார வளர்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக்கும் பொறுப்பு இம்மாநாட்டுக்கு இருப்பதாக கருதுகிறேன். இந்த இலக்கை எட்ட கடந்த ஐந்து மாநாடுகளிலும் சிறந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
உலகின் பல பகுதிகளில் அரசியல் பதற்றம், நெருக்கடி மற்றும் மனித நேய நெருக்கடிகள், பொருளாதாரம் பலவீனம் உள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுகிறது. வளரும் நாடுகள் பல பொருளாதார தேக்கத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கான சவாலை மேலும் அதிகரித்துள்ளது.
தலைவர்களை சந்திக்க வாய்ப்பு
நான் பிரதமரான பின் பிரேசில், சீனா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களை முதன் முறையாக சந்திக்கும் வாய்ப்பாகவும் இம்மாநாடு அமைகிறது. உலக மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு இச்சந்திப்பு உதவும். தென் அமெரிக்க நாட்டு தலைவர்களையும் சந்திக்க இம்மாநாடு உதவிகரமாக இருக்கும். இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் குறித்து விவாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
மாநாட்டின் முதல் நாளில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக் கிறார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.
11 நாடுகளுக்கு அழைப்பு
இம்மாநாட்டின் விருந்தினர்களாக தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, பெரு, ஈக்வடார், கயானா, பராகுவே, சுரினாம், உருகுவே, வெனிசுலா ஆகிய 11 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைந்துள்ளதால், இப்பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது.