வட இந்தியாவில் பிரபலமான பருப்பு கறிக்கான சமையல் குறிப்பை பெற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி நான்தான் என ஒபாமா வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
இந்தியா தனியார் ஊடக நிறுவனத்தின் மாநாடு ஒன்றுக்கு ஒபாமா விருந்தினராக வந்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒபாமாவுடனான கலந்துரையாடலும் நடந்தது.
அதில் அவர் பேசுகையில், "நேற்று இரவு எனக்கு தால் (பருப்பு) பரிமாறப்பட்டது. பரிமாறியவர் அது எப்படி செய்யப்பட்டது என்று விளக்க ஆரம்பித்தார். ஆனால் நான் அவரை தடுத்து நிறுத்தினேன். ஏனென்றால் எனக்கு தால் எப்படி செய்வது என்பது தெரியும். கல்லூரி மாணவனாக இருந்தபோது எனது அறையில் உடன் இருந்த இந்திய நண்பரிடமிருந்து அதைக் கற்றேன்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "கீமாவும் நன்றாக செய்வேன். சிக்கன் சுமாராக செய்வேன். ஆனால் சப்பாதி மிகக் கடினம். செய்ய முடியாது" என்றார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஒபாமா கலந்துரையாடலில் பேசும் போது சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் பேசினார். முன்னதாக, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து கேள்வி கேட்க முற்பட்டார். ஆனால் அவரை தடுத்த ஒபாமா, நீங்கள் பத்திரிகையாளர். எப்போதும் உங்களுக்கு பேச வாய்ப்பிருக்கும். மற்றவர்கள் கேள்வி கேட்கட்டும் என்று கூறினார்.