இந்தியா

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட டெல்லி புகைப்படத்தை அனுப்பி யுஏஇ விண்வெளி வீரர் வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த முதல் 2 விண்வெளி வீரர்களில் ஒருவர் சுல்தான் அல்நெயாதி. இவர் சர்வதேச விண்வெளி மையத்தில் பணிபுரிகிறார். இவர் இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியை புகைப்படம் எடுத்து எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இரவில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் டெல்லி மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

அத்துடன், “சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட டெல்லியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், நமஸ்தே, வணக்கம்என 11 இந்திய மொழிகளில் வணக்கம் தெரிவித்துள்ளார்.

சுல்தான் அல்நெயாதியின் இந்த பதிவை இதுவரை 2.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 7,500 பேர் லைக் செய்துள்ளனர். விண்வெளியில் இருந்து இந்தியா தொடர்பான புகைப்படத்தை அல்நெயாதி இதற்கு முன்பும் பகிர்ந்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் இமயமலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். பனிபடர்ந்த மலைகளுக்கு நடுவே மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்ததை அந்தப் படத்தில் காண முடிந்தது.

SCROLL FOR NEXT