கோஷமில்லை.. வேலைநிறுத்தமில்லை.. உண்ணாவிரதம்கூட இல்லாமல் கேரளாவில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடரணி பகுதியில் உள்ள உணவகங்கள் தேனீர் விலையையும் சில நொறுக்குத் தீணி விலையையுன் திடீரென உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து கூடரணி விவசாயிகள் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
விளைவு ஒரு தற்காலிக தேனீர் கடை. அந்தக் கடையில் வெறும் 10 ரூபாய்க்கு ஒரு டீயும் ஏதாவது ஒரு திண்பண்டமும் கிடைக்கும். ஒரு டீக்கு ஒரு கடி (‘Oru Chaayakku Oru Kadi’) இப்படித்தான் அந்தக் கடைக்கு பேரிட்டிருக்கிறார்கள் ஜனகீய பிரதிஷேத சாயா கடா என்ற அமைப்பினர். இந்த அமைப்புக்கு வயது 5 நாள். அமைப்பு ஆரம்பித்த நாளிலேயே டீக்கடையையும் ஆரம்பித்துள்ளனர்.
அவமதிப்பால் உதித்த அமைப்பு
இந்த டீக்கடை குறித்து வர்கீஸ் கரோட்டயில் கூறும்போது, "டிசம்பர் 1-ம் தேதி முதல் திடீரென தேனீர், வடை, நெய்யப்பம் விலைகளை உயர்த்தினர். எந்த முன்னறிவிப்புமே இல்லாமல் விலை உயர்த்தப்பட்டது. அது குறித்து கேட்டபோது "இங்கே என்ன விலையில் பொருட்களை விற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். உங்களுக்குத் தேவைப்பட்டால் வாங்குங்கள் இல்லாவிட்டால் இடத்தை காலி செய்யுங்கள்" என்றனர். விவசாயிகளான எங்களால் இத்தகைய அவமதிப்புகளை தாங்க முடியவில்லை. அதன் காரணமாகவே எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்த தேனீர் கடையை ஆரம்பித்துள்ளோம். இங்கே ஒரு டீயும் அதனுடன் ஒரு நொறுக்குத்தீணியும் ரூ.10-க்கு விற்கிறோம்" என்றார்.
ஜோஸ் குருங்காட்டு என்ற மற்றுமொரு விவசாயி கூறும்போது, "எங்கள் தேனீர் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களது நூதனப் போராட்டத்தை விவசாயிகள் வெகுவாக வரவேற்கின்றனர். மாலை 4 மணி முதல் 7 மணி வரை எங்கள் கடை இயங்குகிறது. இப்போது கூட்டமும் அதிகமாக வருகிறது. அதனால், ரூ.20-க்கு ஒரு டீயும் மூன்றுவித நொறுக்குத் தீணியும் விற்கிறோம். முதல் நாளன்று கடைக்கு 100 பேர் வந்தனர். நேற்று (திங்கள்கிழமை) 450 பேர் வந்தனர். சிலர் வீட்டுக்கு பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.