மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் விவகாரத்தை தொடர்ந்து, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி கே.எல்.மஞ்சு நாத்துக்கு பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வழங்க கொலீஜியம் (நியமனக்குழு) அனுப்பிய பரிந்துரையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.
மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நீதிபதிகள் நியமனக்குழு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘என்னை ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது தவறு’ என்று தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.எல்.மஞ்சு நாத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்திருந்தது.இதை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. அவர் மீது சில புகார்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டு, மத்திய அரசு கோப்பை திருப்பி அனுப்பியுள்ளதாக சட்டத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனி, நீதிபதி மஞ்சுநாத் நியமனத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தி அனுப்பி வைத்தால் மட்டுமே அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பான பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதால், அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் 26-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிகிறது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக அசுதோஷ் மொகந்தா நியமிக்கப்பட உள்ளார்.