புதுடெல்லி: நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும் மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர்.
இதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர், மூத்தஅமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்க இருப்பதால் செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்கின்றனர்.
விழாவையொட்டி செங்கோட்டையில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வண்ண மலர்களால் ஜி-20 லோகா அமைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை மட்டுமன்றி குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் உட்பட டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களும் மூவர்ண நிறத்தில் ஜொலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
என்எஸ்ஜி, எஸ்பிஜி படை: இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதன்காரணமாக பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். என்எஸ்ஜி படை, எஸ்பிஜி படை,மத்திய பாதுகாப்பு படைகள், டெல்லி போலீஸார் இணைந்துபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 200 மீட்டர் தொலைவு வளாகத்தில் ஒட்டுமொத்தமாக 10,000 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ட்ரோன்களில் கண்காணிப்பு: செங்கோட்டை வளாகத்தில் அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கிய இடங்களில் முகங்களை அடையாளம் காணும் 1,000 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உயரமான கட்டிடங்களில் குறிதவறாமல் சுடும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ட்ரோன்களை கண்டறியும் ரேடார் பொருத்தப்பட்டிருக்கிறது.
செங்கோட்டையில் சுதந்திர விழா நடைபெறும்போது பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டங்களை பறக்கவிட்டால் அவற்றை பிடிக்க 153 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.