கர்நாடக மாநிலம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, பத்ரா ஆகிய பெரிய அணைகள் அபாய அளவை எட்டியுள்ளன. கிருஷ்ண ராஜ சாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணை யில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து கர்நாடகா, கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்தால் அங் குள்ள அனைத்து அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடகில் 875.22 மி.மீ மழை
கர்நாடக மாநிலத்தில் உள்ள மல நாடு பகுதிகளான குடகு, தலைக் காவிரி, மடிகேரி, சிக்மகளூர், சிருங்கேரி ஆகிய இடங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந் துள்ளது. கன மழையின் காரணமாக அங்குள்ள சாலைகள், பயிர்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1499.35 மி.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில் நிகழாண்டின் தொடக் கத்திலே 875.22 மி.மீ.மழை பதி வாகியுள்ளது. தலைக்காவிரி பகுதி யில் அதிகரித்து வரும் மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
அரபிக் கடலில் தாழ்வு மண்டலம்
அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அப்பகுதி யில் நீடித்து வருவதால் மங்களூர், கார்வார், ஷிமோகா, ஹாசன் உள் ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அங்கு பல லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர் களும் கரும்பு தோட்டமும் நீரில் மூழ்கியுள்ளன. பாகமண்டலா திருவேணி சங்கமத்தில் ஏற்பட் டுள்ள வெள்ளப்பெருக்கின் காரண மாக அங்குள்ள மக்கள் பாதுகாப் பான இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
அணைகளின் நீர் மட்ட விவரம்
காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் தொடரும் கன மழையின் காரணமாக மண்டியா மாவட்டத் தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அதிகரித்து கொண்டே இருக் கிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86.85 அடியாக உயர்ந்திருக்கிறது.
அணையில் இருந்து வினா டிக்கு 2687 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது.மேலும் அணைக்கு வினாடிக்கு 18,363 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை வினாடிக்கு 6000 கன அடி நீர் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவிலும் கர்நாடகத்திலும் தொடர்ந்து மழை பெய்துவருவ தால் மைசூரில் உள்ள கபினி அணை எந்நேரத்தில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 22000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அதிகபட்சமாக வினாடிக்கு 10000 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.
ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் ஆபத் தான அளவை எட்டியுள்ளதால் புதன்கிழமை அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு வந்து கொண்டி ருக்கும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது