உத்தரப் பிரதேசத்தில் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் போட்டியிட வாய்ப்பு கேட்ட குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் உறவினர்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக மறுத்துள்ளது.
உ.பி.,யின் கான்பூர் ஊரகப்பகுதியின் ஜின்சாக்நகர் பஞ்சாயத்து தலைவர் பதவியில் போட்டியிட தீபா கோவிந்த் மற்றும் வித்யாவதி ஆகியோர் வாய்ப்பு கேட்டு பாஜகவில் மனு செய்தனர். இவர்களில் தீபா, குடியரசு தலைவரான ராம் நாத் கோவிந்தின் சகோதரி மகன் பங்கஜ் கோவிந்தின் மனைவி. மற்றவரான வித்யாவதி, ராம் நாத்தின் மைத்துனி ஆவார். எனினும், இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு தர மறுத்த உபி மாநில பாஜக அப்பதவிக்கு சரோஜினி தேவி கோரி என்பவரை போட்டியிட வைத்துள்ளது.
இதனால், பெரும் ஏமாற்றம் அடைந்த உறவினர்களில் வித்யாவதி தம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி வெளியிடவில்லை. ஆனால், தீபா தான் பாஜக வேட்பாளரை எதிர்த்து அப்பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதற்காக, மனு தாக்கல் செய்யும் கடைசி தேதி நவம்பர் 10 ஆகும். இங்கு மூன்றாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த செயலின் மூலம் தாம் தலைவர்களின் உறவினர்கள் என்பதற்காக வாய்ப்பளிக்கும் கட்சி அல்ல என உ.பி.,யின் பாஜக நிர்வாகிகள் கூறிவருகின்றனர். எனினும், தகுதியான வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனும் புகாரின் அடிப்படையில் உ.பி.,யின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் உ.பி., மாநில பாஜகவின் பொதுச்செயலாளரான விஜய் பகதூர் பாதக், ‘வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள வேட்பாளர்களை சரியாக தேர்ந்தெடுத்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது’ எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் அதன் நகர மேயர் பதவிக்கு பாஜக சார்பில் மிருதுளா ஜெஸ்வால் என்பவர் போட்டியிடுகிறார். இவர் மூன்றுமுறை நாடாளுமன்ற எம்பியாக இருந்து மறைந்த சங்கர் பிரசாத் ஜேஸ்வாலின் மருமகள் ஆவார். வரும் 22, 26 மற்றும் 29 என மூன்று கட்ட வாக்குப்பதிவின் எண்ணிக்கை டிசம்பர் 1-ல் நடைபெற்று அதே தினம் மாலையில் அதன் முடிவுகள் வெளியாக உள்ளன.