கேரள மாநிலம் கொச்சியில் தட்டேகாட் பகுதியில் கிணற்றில் விழுந்த குட்டி யானை ஒன்று பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட யானைக் குட்டியை அது சார்ந்த யானைக் கூட்டம் அன்போடு அழைத்துச் சென்ற சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
தட்டேகாட் பகுதியில் உள்ள கிணற்றில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. அந்த யானையின் அபயப் பிளிறல் இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஊராரை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பியது. அதிகாலை, ஊர்வாசிகள் யானை இருக்குமிடத்தைக் கண்டறிந்தனர். உடனடியாக வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் முதலில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கிணற்றின் பக்கவாட்டில் ஒரு சாய்வான பாதையை ஏற்படுத்த முற்பட்டனர். மீட்புக்குழுவினர் வந்ததைப் பார்த்தவுடனேயே யானைக்கூட்டம் ஒதுங்கி மீட்புக்குழுவுக்கு வழிவிட்டது.
மீட்புக்குழுவினர் யானை மேலே ஏறும் வகையில் சாய்வான பாதையை ஏற்படுத்த, யானைக்குட்டி தோதாக ஏறி வெளியே வந்தது. குட்டி யானை வெளியே வந்ததும் சற்றே தொலைவில் காத்திருந்த யானைக் கூட்டம் குட்டி யானையை தும்பிக்கையால் பாசத்துடன் வருடியதும் ஆறுதல் சொல்வதுபோல் தட்டிக் கொடுத்தும் அழைத்துச் சென்றது காண்போரை நெகிழச் செய்ததாக தட்டேகாட் வன அலுவலர் சிஜூ வி.சாக்கோ தெரிவித்தார்.