இந்தியா

ம.பி.யில் பெண்ணின் வயிற்றில் 15 கிலோ கட்டி: வெற்றிகரமாக அகற்றிய இந்தூர் மருத்துவர்கள்

செய்திப்பிரிவு

இந்தூர்: வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டியை இந்தூர் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவமனைக்கு அஷ்தா என்ற 41 வயது பெண் வயிற்று வலி சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்கள் அப்பெண்ணின் அடிவயிற்றில் மிகப்பெரிய கட்டி வளர்ந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் 2 மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் 15 எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான அதுல் வியாஸ் கூறும்போது, "கட்டி பெரியதாக இருந்ததாலும், உணவு உண்ணும் போதும், நடக்கும்போதும் நோயாளிக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாலும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பிறகு மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பல நரம்புகள் மீது கட்டி பரவியிருந்தது. அறுவை சிகிச்சையில் சிறு தவறு நேர்ந்தாலும் அது ஆபத்தில் முடிந்துவிடும். எனவே மருத்துவர்கள் மிவும் நுட்பமாக செயல்பட வேண்டியிருந்தது" என்றார்.

49 கிலோ எடை கொண்ட அப்பெண், 15 கிலோ எடையுள்ள கட்டியை சுமந்து வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “இந்தக் கட்டியால் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டி வெடிக்கவிருந்தது. அவ்வாறு வெடித்திருந்தால் அது அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது அப்பெண் அபாய கட்டத்தை கடந்து விட்டார்” என்றனர்.

இந்த மருத்துவமனைக்கு வருவதற்கு முன் அப்பெண்ணை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார். அடிவயிற்றில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்று குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதூரியா, துணைத் தலைவர் மயங்க்ராஜ் சிங் பதூரியா ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT