புதுடெல்லி: நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பூமியை வலம்வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரத்தை அதிகரித்து, ஆக. 1-ம்தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது.
5 நாள் பயணத்துக்கு பிறகு ஆக.5-ம் தேதி நிலவின் வட்டச் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை படிப்படியாக சுருக்கி விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சந்திரயான் பயணப்பாதை 6-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று மதியம் 1.30 மணிக்கு திரவ வாயு இயந்திரம் இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ., அதிகபட்சம் 1,437 கி.மீ. தொலைவு கொண்ட நிலவு வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வலம் வருகிறது.