வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சட்டத்தில் சலுகை வழங்கியதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. உரிய ஆவணங்களுடன் மீண்டும் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிரிட்டனின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் 2007-ம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தை கையகப்படுத்தியது தொடர்பாக ரூ.7,990 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்தது. இந்த தொகையை வோடபோன் நிறுவனம் செலுத்த மறுத்ததால், வட்டியுடன் சேர்த்து ரூ.20 ஆயிரம் கோடியாக வரி பாக்கி உயர்ந்தது.
இந்நிறுவனத்துக்கு சிறப்பு சலுகை அளித்து சமரசத்தில் ஈடுபட கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பேரில், சமரசத்தில் ஈடுபட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வாஜித் பட்டாச்சார்யா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வரியை வசூலிக்க, வருமான வரி சட்டத்தின் பிரிவு 9-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே திருத்தம் கொண்டு வரப்பட்டும் அதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இது அனைவரும் சமம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கையை மீறும் செயல். வோடபோன் நிறுவனத்துக்காக இந்திய நெதர்லாந்து இரு தரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப் பந்தம் என்ற பெயரில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. வரிச் சட்டத்தை மீறுதல் இந்த ஒப்பந் தத்தின் கீழ் வராது. எனவே, சமரச திட்டத்தை ரத்து செய்து வரி பாக் கியை வசூலிக்க உத்தரவிட வேண் டும்,’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் எச்.எல்.தத்து, பாப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தது. இது தொடர்பான ஆவணங்கள் மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெறப்பட்டுள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், உரிய ஆவணங்க ளின்றி மனு தாக்கல் செய்யப் பட்டதால், இம்மனுவை விசார ணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உரிய ஆவணங்களைப் பெற்று மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.