பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கேரள சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்து உரையாற்றுகிறார் முதல்வர் பினராயி விஜயன். அருகில் கேபினட் அமைச்சர் ராதாரகிருஷ்ணன். படம்: பிடிஐ 
இந்தியா

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என கேரள சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல தரப்பினரிடம் இருந்து சட்ட ஆணையம் கடந்த மாதம் ஆலோசனைகளை பெற்றது. இந்நிலையில் பொது சிவில் சட்டத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று தாக்கல் செய்தார். இதை வரவேற்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), தீர்மானத்தில் பல திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டு வர ஆலோசனை கூறியது. அதன்படி இறுதி செய்யப்பட்ட தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் வாசித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சங் பரிவார் கூறுவது போன்ற பொது சிவில் சட்டம் அரசியல் சாசனத்தில் இல்லை. அது மனுதர்ம சாஸ்திர அடிப்படையில் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றை அமல்படுத்த சங் பரிவார் முயற்சிக்கவில்லை. முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்கீழ் உள்ள விவாகரத்து சட்டங்களில், குற்றம் கண்டுபிடிக்கும் ஆளும் பாஜக அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எதுவும் செய்யவில்லை. அவர்களின் நலனுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு அமல்படுத்த முயலும் பொது சிவில் சட்டம் ஒருதலைபட்சமானது மற்றும் அவசர நடவடிக்கை. இதுநாட்டின் மதச்சார்பற்ற தன்மையை குலைக்கும். அதனால் இந்த பொது சிவில் சட்டம் குறித்து சட்டப்பேரவை கவலை கொள்கிறது.

நெறிமுறை அடிப்படையில் மட்டுமே பொது சிவில் சட்டத்தை கொண்டு வரலாம் எனஅரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இது கட்டாயம் அல்ல. அரசியலமைப்பு சட்டம் 25-வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத அடிப்படையிலான தனி விதிமுறைகளை பின்பற்றும் உரிமை உள்ளது. இதை தடுக்கும் எந்த சட்டமும்,அரசியலமைப்பு சட்ட உரிமையை மீறுவதாகும்.

பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்த மாநிலங்கள் முயற்சிக்கலாம் என்றே அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு கூறுகிறது. இதுபோன்ற எந்த நடவடிக்கையும், விவாதங்கள் மூலம் மக்களின் ஒருமித்த கருத்துப்படி ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யப்படாதது கவலை அளிக்கிறது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது மதச்சார்பற்ற நடவடிக்கைக்கு எதிரானது, இது நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கை. சட்டப்பேரவை அளவிலான விவாதத்திலேயே, பொது சிவில் சட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. பொதுவான சிவில் சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றம் முயற்சிக்கலாம் என்றுதான் சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். ஆனால், இதை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தவில்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கு சாத்தியங்கள் உள்ளது என்று மட்டும்தான் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரளாவில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும், மற்றும் இதர மத அமைப்புகளும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கேரள அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.

SCROLL FOR NEXT