இந்தியா

பசு தேசிய விலங்காக அறிவிக்கப்படுமா? - பாஜக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பசு தேசிய விலங்காக அறிவிக்கப்படுமா என்ற பாஜக எம்.பி.யின் கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவையில் பாஜக எம்.பி. பாகீரத் சவுத்ரி நேற்று எழுப்பிய கேள்வியில், “கோமாதாவான பசுவை நம் நாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக அங்கீகரித்து அதை தேசிய விலங்காக அறிவிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளதா?” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அளித்த பதில் வருமாறு: தற்போது இந்தியாவின் தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளன. இந்த இரண்டு உயிரினங்களும், அட்டவணை 1-ல் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் பசுவையும் சேர்த்து தேசிய விலங்காக அறிவிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.

தேசிய விலங்கு புலி: இதற்காக மத்திய சுற்றுச்சுழல், வனம் மற்றும் தட்பவெட்ப மாற்றம் துறையின் ஆவணங்களிலும் தலையிடும் எண்ணம் இல்லை. இந்த அமைச்சக ஆவணங்களில் தேசிய விலங்காக புலி, தேசியப் பறவையாக மயிலை குறிப்பிட்டு கடந்த 2011 மே 30-ல் மறு அறிவிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கோகுல் மிஷன்: மத்திய அரசின் சார்பில் பசு உள்ளிட்ட விலங்குகளையும் அதன் சந்ததிகளையும் பாதுகாக்க இந்திய விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநில அரசுகளின் கைகளிலும் பசு உள்ளிட்ட விலங்குகள் பாதுகாப்பு உள்ளது. இதற்காக மத்திய அரசின் ‘தேசிய கோகுல் மிஷன்’ எனும் புதிய திட்டத்தையும் அவை அமல்படுத்தி வருகின்றன.

இதன்மூலம் இந்திய வகை பசுக்களும் அதன் சந்ததிகளும் பாதுகாக்கப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதே மத்திய அரசு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT