புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கியது. புதன்கிழமையும் தொடரும் இந்த விவாதத்துக்குப் பின்னர், பிரதமர் மோடி மக்களவையில் வியாழக்கிழமை பதிலுரை வழங்குவார் எனத் தெரிகிறது. அதற்கு அடுத்தநாள் வெள்ளிக்கிழமை இந்தக் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. தற்போது நடந்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது கவனம் ஈர்த்தவை:
> ராகுல்... அமைச்சர் கேள்வி: மக்களவை பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியவுடனேயே பாஜக சார்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஒரு கேள்வியை முன்வைத்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது ஏன் கவுரவ் கோகோய் பேசுவதாகக் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அப்போது பாஜகவினர் ராகுல் காந்தி நம்பிக்கையற்றவர் என்று விமர்சித்தனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
> கவுரவ் கோகாய் அடுக்கிய கேள்விகள்: காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகோய் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். கோகோய் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர் என்பதால் அவரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அவர் தனது பேச்சில், “இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இது பலத்தை நிரூபிப்பதற்கான தீர்மானம் அல்ல. இது மணிப்பூருக்கு நீதி வேண்டிய கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
எதிர்க்கட்சிகள் மிகத் தெளிவாக மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி அவையில் விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், அவர் தொடர்ந்து மவுனத்தைத் தேர்ந்தெடுத்தார். அவரது மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம். மணிப்பூர் விவகாரம் பற்றி 80 நாட்களுக்குப் பின்னர் வெறும் 30 விநாடிகள் மட்டுமே பிரதமர் மோடி பேசியுள்ளார். அதுவும் அவைக்கு வெளியே.
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை மத்திய அரசு ஏன் காப்பாற்ற நினைக்கிறது? வன்முறையில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை செல்லாதது ஏன்? நாங்கள் மணிப்பூர் சென்று கள நிலவரத்தை அறிந்துவந்துள்ளோம். பிரதமர் அவர்களே, நீங்களும் மணிப்பூர் சென்றுவிட்டு கள நிலவரம் அறிந்து கொண்டு வந்து இங்கே பதிலுரை ஆற்றுங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரட்டை இஞ்சின் அரசின் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்திருக்க வேண்டும். கலவரம் தொடங்கிய 2 அல்லது 3 நாட்களில் அவர் அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டும்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது என்றால் அதற்கு மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம்” என்றார் தருண் கோகாய்.
> ஒளிபரப்பு... சலசலப்பு... - கோகாய் பேசிக்கொண்டிருந்தபோது, மக்களவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் ஏன் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி தெரிவிக்காமல் விவரத்தை இருட்டடிப்புச் செய்கிறீர்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை சீர் செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் தடைபட்ட விவாதம் தொடர்ந்தது
> சோனியாவுக்கு இரண்டு வேலை: பாஜக சார்பில் முதல் நபராக நிஷிகாந்த் துபே பேசினார். அவர், "காலையில் நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசு மீதான அவநம்பிக்கையில் கொண்டுவரப்பட்டது இல்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் அவர்களுக்குள் யாரையெல்லாம் நம்பலாம் என்பதை தெரிந்து கொள்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியதாக தெரிவித்தார். மேலும், தனது பேச்சில் சோனியா காந்தியை தாக்கிப் பேசிய துபே, “சோனியா காந்திக்கு இப்போது இரண்டு வேலைகள்தான் உள்ளன. ஒன்று மகனுக்கு பாதையமைத்துக் கொடுப்பது, இரண்டாவது மருமகனுக்கு பரிசளிப்பது” என்றார்.
மேலும், “இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏழையின் மகனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு வீடுகள், குடிநீர், கழிப்பறைகள் வசதி ஏற்படுத்தி கொடுத்தவருக்கு எதிரானது. இது ஏழைகளுக்கு எதிரானது” என்று துபே கூறினார்
> பிரதமர் செல்வதில்லை: இவர்கள் இருவரையும் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, "மணிப்பூர் முதல்வர் உதவியின்றி தவிக்கிறார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை. மே மாதம் முதல் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கும் செல்லவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
> மோடிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை: நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், “பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை” என்று குற்றம்சாட்டினார்.
> இறுமாப்பு அரசு: அவரைத் தொடர்ந்து இண்டியா கூட்டணி சார்பில் பேசிய என்சிபி-யின் எம்.பி சுப்ரியா சுலே, "இந்த அரசைப் பற்றி எண்ணும்போது எனக்கு முதலில் தோன்றும் வார்த்தை "ஹுப்ரிஸ்" (இறுமாப்பு) என்று கூறினார். மேலும் “கடந்த 9 ஆண்டுகளில் 9 மாநில அரசுகளை பாஜக கவிழ்த்துள்ளது” என்று குற்றம்சாட்டினார். “மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றார்.
> நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்த சிவசேனா: இண்டியா கூட்டணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவதாத்தில் பேசிய ஷிண்டே அணி சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, மோடி நாட்டுக்காவும், வீர சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்ததுக்காகவும் ஆற்றிவரும் தொண்டை பாராட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சிவசேனா எதிர்ப்பதாக கூறினார்.
> வெற்றி மீது அமர்ந்து தோல்வியை பார்ப்பவர்கள்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய பிஜு ஜனதா தளம் எம்.பி பினாகி மிஸ்ரா கூறுகையில், “அரசியல் கட்சியாக நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்றாலும், என்னால் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முடியாது. ஒடிசாவுக்கு மத்திய அரசு செய்துள்ள பல விசயங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வெற்றியின் மீது அமர்ந்து கொண்டு தோல்வியை பார்ப்பதில் காங்கிரஸ் கட்சி மிகவும் பொருத்தமானது என்று நான் நம்பி வந்திருக்கிறேன். இந்த அவையில் பிரதமர் பேசிய ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சி துண்டாடப்படுவது அவர்களுக்கும் தெரியும். பிரதமர் பேசாமல் இருப்பது சரியா தவறா என்று நாட்டு மக்கள் முடிவு செய்யட்டும். இந்தப் பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" என்று கூறினார்.