2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
2ஜி வழக்கில் என் மீது 2011-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அம்மனு மீதான விசாரணைக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார் வையில் நடப்பதால், இதுகுறித்த விசாரணை மனு உச்ச நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.
இந்த உத்தரவின்படி, 2013-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தேன். இந்த மனு கடைசியாக மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு விரைவாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கலைஞர் டிவி-க்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அதில் நான் பங்குதாரராக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கலைஞர் டிவி-யில் எனக்கு 20 சதவீதம் பங்குகள் மட்டுமே உள்ளன. ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு காரணமாக மாட்டார்கள் என்று பல முறை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நான் 2007-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை மட்டுமே இயக்குநராக இருந்தேன். மூன்று கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். இயக்குநர் பதவியிலிருந்து 20-ம் தேதி ராஜினாமா செய்துவிட்டேன்.
நான் ராஜினாமா செய்து ஒன்றரை ஆண்டு கழித்து, டிசம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை உள்ள காலகட்டத்தில், பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 2010 முதல் பிப்ரவரி 2011 வரை பணம் திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வழக்கிலிருந்து விடுவிக்கும் மனு தாக்கல் செய்து இரண்டரை ஆண்டு கழிந்து விட்டது. விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டால், இந்த மனு செல்லாததாகி விடும். அது பெரும் இழப்பாக முடிந்துவிடும்.
எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க கோரும் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.